search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து அமைப்புகள் பேரணி"

    ராமர் கோவில் கட்டுவது ஒன்றும் அரசியல் சார்ந்த பிரச்சனை அல்ல என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். #DevendraFadnavis
    மும்பை:

    அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி உத்தவ் தாக்கரே நேற்று அயோத்திக்கு சென்றார். அங்கு நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

    இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரி ஒய்.பி.சவானின் நினைவு தினத்தையொட்டி நேற்று சத்தாரா மாவட்டம் காரட் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அஞ்சலி செலுத்தினார். மாநில பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வேவும் உடன் இருந்தார்.

    பின்னர் நிருபர்களை சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ், உத்தவ் தாக்கரேயின் அயோத்தி பயணம் குறித்து கேள்விக்கு பதில் அளித்து கூறுகையில், “அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது ஒன்றும் அரசியல் சார்ந்த பிரச்சனை இல்லை. ராமர் இந்தியா முழுமைக்குமான கடவுளாவார். உத்தவ் தாக்கரேவும் அவரின் ஆசிர்வாதத்தை பெற்றிருப்பார்” என்றார்.

    அவசர சட்டம் இயற்றும் கோரிக்கை குறித்து பா.ஜனதா தலைவர் ராவ் சாகேப் தன்வே கூறியதாவது:-

    ராமர் கோவில் மற்றும் பாபர் மசூதி தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது, எனவே அதிகாரத்தில் இருந்தாலும்கூட, அரசாங்கத்தால் இதில் என்ன செய்ய முடியும்?.

    அயோத்திக்கு சென்று எங்களுக்கு எதிராக கோஷம் எழுப்புவதால், இருகட்சிகளும் கடுமையான கருத்துவேறுபாடு கொண்டிருப்பதாக அர்த்தமில்லை.

    ஓட்டுகள் சிதறுவதை தடுக்க வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களின் பா.ஜனதாவும், சிவசேனாவும் கூட்டணி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DevendraFadnavis
    ராமர் கோவில் கட்டுமான அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி விசுவ இந்து பரி‌ஷத் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த ‘தர்மசபா’ தொடங்கியது. #Ayodhyarally
    அயோத்தி, நவ. 25-

    ராமர் பிறந்த இடமான அயோத்தி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளது. இங்கு ராமருக்கு கோவில் கட்டப்பட்டு இருந்ததாகவும் அதை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது. 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்போவதாக கூறி இந்து அமைப்புகள் கரசேவை நிகழ்ச்சியை நடத்தின.

    இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டையும் மீறி பாபர் மசூதியை இடித்ததுடன் அந்த இடத்தில் சிறிய வடிவிலான ராமர் கோவிலையும் கட்டினார்கள். அங்கு பெரிய அளவில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்று இந்து அமைப்பினர் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் வழக்கு நிலுவையில் உள்ளது.

    ராமர் கோவில் கட்டுவது சம்பந்தமாக உடனே கோர்ட்டு தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று இந்து அமைப்புகள் வற்புறுத்தி வந்தன. ஆனால், உடனடியாக தீர்ப்பு சொல்ல முடியாது என கூறி ஜனவரி மாதத்துக்கு வழக்கை தள்ளி வைத்தனர்.

    இதையடுத்து ராமர் கோவில் கட்டுமான அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் என வற்புறுத்தி விசுவ இந்து பரி‌ஷத் அமைப்பினர் அயோத்தியில் இன்று தர்மசபா என்ற பேரணி நிகழ்ச்சியை நடத்துவதாக அறிவித்தனர். இதற்காக நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தளம், சிவசேனா மற்றும் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.

    நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாட்களாகவே நாடு முழுவதிலும் இருந்து தொண்டர்கள் அயோத்தியில் குவிந்த வண்ணம் இருந்தனர். தற்போது அங்கு லட்சக்கணக்கானோர் திரண்டு இருக்கிறார்கள். புகழ்பெற்ற சாமியார்களான ஜெகத் குரு ராமானந்தசாரியா, சுவாமி ஹன்ஸ்தேவ சாரியா, ராம்பத்ரசாரியா, ராமேஸ் வர்தாஸ், வைஷ்ணவ், மகாந்த் நிரித்திய கோபால் தாஸ் மற்றும் ஏராளமான சாமியார்கள் பங்கேற்றுள்ளனர்.

    இது தவிர, விசுவ இந்து பரி‌ஷத் தலைவர்கள் மற்றும் பல்வேறு இந்து மத அமைப்பின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

    தர்மசபா நிகழ்ச்சி, ராமஜென்ம பூமிக்காக கட்டுமான பொருட்களை தயார் செய்யும் இடமான நயாஸ் ஒர்க்ஷாப் அருகில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள படேபக்த்மால் கிபாகியா என்ற இடத்தில் நடந்தது.

    பகல் 12.30 மணியளவில் தர்ம சபா நிகழ்ச்சி தொடங்கியது. பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து தலைவர்களும், சியர்களும் பேசி வருகிறார்கள்.
    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி இந்து அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் பேரணியில் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #AyodhyaRally #RamJanambhoomi #ShivSena
    லக்னோ:

    அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தாமதம் ஆகியுள்ளது. 2014-ம் ஆண்டு பா.ஜ.க. வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்ததால் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வழிவகை செய்யப்படும் என்று விசுவ இந்து பரி‌ஷத், ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா மற்றும் சங்பரிவார் தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.

    ஆனால் சட்ட சிக்கல்கள் காரணமாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கப்படவில்லை. இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று விசுவ இந்து பரி‌ஷத், ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா வலியுறுத்தின. பண மதிப்பு இழப்புக்கு எப்படி அவசர சட்டம் கொண்டு வரப்பட்டதோ அதே போன்று ராமர் கோவில் கட்டவும் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும் உத்தரபிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க.வும் இந்த சர்ச்சையில் உறுதியான எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

    இதைத் தொடர்ந்து ராமர் கோவில் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி மிகப்பிரமாண்ட பேரணி நடத்த விசுவ இந்து பரி‌ஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் முடிவு செய்துள்ளன. நாளை (ஞாயிற்றுக்கிழமை) இதற்காக லட்சக்கணக்கான இந்துக்கள் அயோத்திக்கு மிகப்பெரிய பேரணி நடத்த உள்ளனர். இந்து அமைப்புகளின் இந்த அதிரடி பேரணியால் அயோத்தி விவகாரத்தில் மீண்டும் பதட்டம் உருவாகி உள்ளது.

    நாளைய பேரணிக்காக அயோத்தி பகுதியில் ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரி‌ஷத் தொண்டர்கள் இன்று காலை முதலே குவியத் தொடங்கி உள்ளனர். விசுவ இந்து பரி‌ஷத் மூலம் 1 லட்சம் தொண்டர்களையும், ஆர்.எஸ்.எஸ். மூலம் 1 லட்சம் தொண்டர்களையும் அயோத்தி நோக்கி திரட்டி வருகிறார்கள். அயோத்திக்கு வரும் கரசேவகர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.


    உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வேன்கள், பஸ்கள், லாரிகள், கார்கள், ரெயில்கள், பைக்குகளில் கரசேவகர்கள் அயோத்தி நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் நேற்று முதலே அயோத்தி பகுதியில் பதட்டம் நிலவுகிறது. அயோத்தியில் பேரணி நடத்த போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் அறிவிப்பை வெளியிட மத்திய அரசை வலியுறுத்தும் நடவடிக்கைகளில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மிக, மிக தீவிரமாக உள்ளார். இன்று பிற்பகல் அவர் உத்தரபிரதேசம் செல்கிறார். லட்சுமண்கியூலா பகுதியில் அவர் சாமியார்களை சந்திக்கிறார். இன்று மாலை சரயு நதி ஆரத்தி விழாவில் கலந்து கொள்கிறார்.

    நாளை காலை 11 மணிக்கு அயோத்தி பக்தி மார்க்சில் விசுவ இந்து பரி‌ஷத் மூத்த தலைவர்களை உத்தவ் தாக்கரே சந்தித்துப் பேசுகிறார். நாளை மதியம் 1.30 மணிக்கு அவர் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யத் திட்டமிட்டுள்ளார். உத்தவ் தாக்கரேயுடன் சிவசேனா கட்சியைச் சேர்ந்த 22 எம்.பி.க்கள், 62 எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கிறார்கள்.

    ராமர் கோவில் கட்ட உடனே அவசர சட்டம் கொண்டு வர வலியுறுத்தி நாளை மதியம் பேரணி தொடங்குகிறது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளும் பேரணி என்பதால் அயோத்தியில் பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து அயோத்தியில் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    துணை நிலை ராணுவ வீரர்கள், கமாண்டோ படையினரும் அயோத்தியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் அயோத்தி ராமர் கோவில் விவகாரம் மீண்டும் சூடுபிடித்து இருக்கிறது. பா.ஜ.க. அரசுக்கு இது தவிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #AyodhyaRally #RamJanambhoomi #ShivSena
    ×